99. அருள்மிகு கோமுக்தீஸ்வரர் கோயில்
இறைவன் கோமுக்தீஸ்வரர், மாசிலாமணிநாதர்
இறைவி ஒப்பிலாமுலையம்மை
தீர்த்தம் கோமுக்தி தீர்த்தம்
தல விருட்சம் படர் அரசு
பதிகம் திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருவாவடுதுறை, தமிழ்நாடு
வழிகாட்டி கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்திற்கு கிழக்கே 2.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Thiruvaduthurai Gopuramஒருமுறை சிவபெருமானது கோபத்தால் பார்வதி தேவி பசு வடிவம் எடுத்து இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு பசு வடிவம் நீங்கப் பெற்றார். அம்பிகை பசு வடிவில் வழிபட்டதால் இத்தலம் 'கோகழி' என்றும் 'ஆவடுதுறை' என்றும் அழைக்கப்படுகின்றது. 'கோ'வாகிய பசுவின் சாபம் தீர்த்ததால் இக்கோயிலின் மூலவர் 'கோமுக்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார்.

மூலவர் 'கோமுக்தீஸ்வரர்', 'மாசிலாமணீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'ஒப்பிலாமுலை நாயகி', 'அதுல்யகுஜாம்பிகை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

Thiruvaduthurai Utsavarபிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், நடராஜர், மகாலட்சுமி, அறுபத்து மூவர், பைரவர், சூரியன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. மூன்று சூரியன்கள் ஒரே சன்னதியில் உள்ளனர். இங்கு சிவபெருமானே சகல தோஷங்களையும் நீக்குபவராக உள்ளதால் நவக்கிரக சன்னதி கிடையாது.

இக்கோயிலில் இரண்டு விநாயகர் உள்ளனர். ஒருவர் துணைவந்த விநாயகர். இவர் அம்பிகை பசு வடிவம் எடுத்து வந்தபோது அவருக்குத் துணையாக வந்ததால் அப்பெயர் பெற்றார். மற்றொருவர் அழகிய விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் அகத்தியருக்கு பஞ்சாட்சர உபதேசம் செய்தவர். பிரகாரத்தில் லிங்கத்தின்மீது பசு பால் சொரியும் சிலை ஒன்று இருக்கிறது. இதற்கு 'கோரூபாம்பிகை' என்று பெயர்.

குழந்தைப் பேறு இல்லாமல் வருந்திய முசுகுந்த சக்கரவர்த்திக்கு, சிவபெருமான் கனவில் தோன்றி இக்கோயிலுக்கு வந்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூற, அவ்வாறே முசுகுந்த சக்கரவர்த்தியும் இங்கு வந்து வேண்ட, சுவாமியும் தியாகராஜராக காட்சி தந்து குழந்தை வரம் அருளினார். இங்கு இவரது நடனம் 'சுந்தர நடனம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த தியாகராஜரே, போகர் முதலான நவகோடி சித்தர்களுக்கும் அவர்கள் வேண்டியபடி அட்டமா சித்திகளையும் அருளியவர்.

கோயில் பிரகாரத்தில் அணைத்திருந்த நாயகர் சன்னதி உள்ளது. சுவாமி அம்பாளை அணைத்த கோலத்தில இருக்கும் இவரை வணங்கினால் பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். பிரம்மோற்சவத்தில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பவர் இவரே. மற்ற நாட்களில் சோமாஸ்கந்த மூர்த்தியே உலா வருவார்.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை மையமாகக் கொண்டு பரிவார சன்னதிகளாக இத்தலம் நந்தி தேவர் சன்னதியாகவும், திருவாரூர் சோமாஸ்கந்தர் சன்னதியாகவும், திருவலஞ்சுழி விநாயகர் சன்னதியாகவும், ஆலங்குடி தட்சிணாமூர்த்தி சன்னதியாகவும், சுவாமிமலை சுப்பிரமண்யர் சன்னதியாகவும், திருச்சேய்ஞலூர் சண்டிகேஸ்வரர் சன்னதியாகவும், சூரியனார் கோயில் நவக்கிரகங்கள் சன்னதியாகவும், சீர்காழி பைரவர் சன்னதியாகவும் வழங்கப்படுகிறது.

திருஞானசம்பந்தர், தமது தந்தையார் யாகம் செய்வதற்கு பொன் வேண்டி இத்தலத்து இறைவனிடம் வேண்டினார். உடனே சிவபெருமான் பூத கணங்களிடம் பொற்கிழியைக் கொடுத்து இக்கோயிலின் பலிபீடத்தில் வைக்குமாறு செய்தார். சம்பந்தரின் தந்தையும் அதைக் கொண்டு யாகம் செய்தார்.

பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தை திருமூலர் அருளிய தலம். அவரது சமாதிக் கோயில் இங்குள்ளது. 18 ஆதீனங்களுள் ஒன்றான திருவாடுவடுதுறை ஆதீனத்தின் தலைமை மடம் இங்குள்ளது. இந்த மடத்தின் ஓர் இடத்தில் போகரின் சீடரும், திருவிசைப்பா அருளியவருமான திருமாளிகைத் தேவரின் சமாதிக் கோயில் உள்ளது.

திருமாளிகைத் தேவர், இங்கு படையெடுத்து வந்த எதிரிப் படை வீரர்களை விரட்ட சிவபெருமானிடம் வேண்டினார். அவரும் கோயில் மதில்களின் மேல் உள்ள நந்திகளை எல்லாம் உயிர்பெறச் செய்ய, அவை எதிரிகளை விரட்டியடித்தன. அதனால் இக்கோயில் மதில்களின் மீது நந்திகள் இல்லை.

Thiruvaduthurai Nandhi Thiruvaduthurai Treeஇத்தலத்தில் உள்ள சுமார் 14 அடி உயரம் கொண்ட பெரிய நந்தி உள்ளது. தர்ம தேவதையே இங்கு நந்தியாக உள்ளதாகவும் கூறுவர். இக்கோயிலின் தல விருட்சமாக உள்ள படர் அரசு மரமும் மிகப் பெரியது. முப்பத்து முக்கோடி தேவர்களும் படர்ந்த அரச மரமாக இருக்க, அதன் அடியில் சிவபெருமான் காட்சி தந்து, அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடனம் புரிந்ததாகக் கூறப்படுகின்றது. அதனால் 'படர்ந்த அரசு வளர்ந்த ரிஷபம்' என்ற பழமொழி இங்குள்ள பகுதிகளில் வழக்கத்தில் உள்ளது.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஐந்து பதிகங்களும், சுந்தரர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இத்தலத்தைப் பாடியுள்ளார்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com